Tuesday, 19 August 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள் 30புலியும் வேண்டும்! எலியும் வேண்டும்!

நான் எழுதிய சிறிய கட்டுரையை இங்கே காணலாம். சுற்றுச் சூழல் புதிய கல்வி மாத இதழில் பிரசுரமாகி உள்ளது. வன விலங்கு என்றாலே பெரிய யானையும், புலியும்தான் ஞாபகம் வரும். ஆனால் சிறிய பாலுட்டிகளைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள இந்த கட்டுரையைப் படிக்கலாமே. உங்கள் கருத்துக்களை சொல்லலாமே!

நன்றி!  

வாருங்கள். மாற்றத்திற்கான நேரம் இது.  பிரவின் குமார் 
கோயம்புத்தூர் 

Sunday, 17 August 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள் 29

நன்னீர் பல்லுயிரியம் - பயிற்சி பட்டறை, சிவகாசி    

இந்த மாதம் 1ம் தேதி, சிவகாசி அய்யா நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி விலங்கியல் துறையும், கோயம்புத்தூர் ஜூ அவுட்ரீச் அமைப்பும் இணைந்து ஒரு நாள் "பிராந்திய நன்னீர் பல்லுயிரிய பாதுகாப்பு பயிற்சிப் பட்டறையை"  கல்லூரி ஆய்வரங்கில் நடந்தது. இந்த நிகழ்ச்சியை இளங்கலை விலங்கியல் துறை தலைவர், முனைவர். இசையரசு அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்த நிகழ்ச்சயில் நான் கலந்து கொண்டு மதிய நிகழ்வுகளை நடத்தினேன். கல்லூரியின் தாளாளர் திரு. அய்யன் கோடீஸ்வரன், கல்லூரியின் முதலவர், முனைவர். பாண்டியராஜன், சிறப்பு அழைப்பாளர் முனைவர். ஹனீபா (செயின்ட் சேவியர் கல்லூரி, பாளையங்கோட்டை), முனைவர் ராஜன் மற்றும் முனைவர். இசையரசு பயிற்சிப் பட்டறையின் விளக்க நூலை வெளியிட்டு பேசினார்கள். முனைவர். ஹனீபா "நன்னீர் மீன்களும் நன்னீர் நிலைகளும்" என்ற தலைப்பில் பேசும்போது, கடந்த சில வருடங்களாக அரிய நன்னீர் மீன்கள் எப்படி அழிந்தது, நன்னீர் மீன்களில் உலகளாவிய பரவல், உள்ளூர் பரவல், வகைகள், அதிகம் உணவிற்காக பெறப்படும் மீன்கள் போன்ற தகவல்களை அவருக்கே உரித்தான எளிமையான பாணியிலே விளக்கி கூறினார். தொடர்ந்து, சிவகங்கை  ராஜா துரைசிங்கம் விலங்கியல் துறை பேராசிரியர் முனைவர்.சுரேஷ் குமார் அவர்கள் "நன்னீர் வாழிடங்களைப் பாதுகாத்தல்" என்ற தலைப்பில் பேசினார்கள். நன்னீர் சூழல் மிகப் பெரிய அளவில் மனிதனுக்கும் மற்ற ஜீவிகளுக்கும் உதவி செய்கின்றது, இன்றைய வளர்ச்சி நன்னீர் வாழிடங்களையும், அதை சார்ந்துள்ள விலங்குகளையும், தாவரங்களையும் அழிக்கின்றன என்றார். 

பின்பு மாசுபாடுகள், நன்னீர் மேலாண்மை குறித்தும் பேசினார்கள்.      

மதிய உணவிற்குப் பிறகு நான் நன்னீர் பல்லுயிரியத்தின் அவசியத்தை விளக்கினேன். பின்பு மேற்குத் தொடர்ச்சி மலையைப் பற்றி சொல்லிவிட்டு, அனைவரையும் எட்டு குழுக்களாகப் பிரித்து மேற்குத் தொடர்ச்சி மலை பற்றிய ஒரு வரைபட செயல்பாட்டை செய்தேன். தொடர்ந்து ஆறுகள் பற்றிய ஒரு செயல்பாட்டை செய்தேன். பின்பு ஆறுகள் பற்றி சொல்லிவிட்டு, நன்னீர் சூழல் வகைகள் அடங்கிய ஒரு செயல்பாட்டை செய்தேன்.         பின்பு அவர்கள் பகுதியில் காணும் நன்னீர் தட்டான்கள் மீன்கள் குறித்த வண்ண அட்டையை காட்டி விளக்கினேன். நன்னீர் தகவல் பெட்டகத்தை பார்த்து, அதில் உள்ள தகவல்களை சிறிது தெரிந்து கொண்டார்கள்.  மேற்குத் தொடர்ச்சி நன்னீர் பல்லுயிரியம் என்ற வாசகம் அடங்கிய ராக்கியை அருகில் உள்ளவர்களின் கையில் கட்டினார்கள். மாசுபாடுகள் மூலமாக அரிய நன்னீர் மீன்கள், நத்தைகள் எப்படி அழிவில் உள்ளன என்றும் சொன்னேன். நீங்கள் என்ன செய்யலாம் என்று சில துணுக்குகளை சொன்னேன். 
நன்னீர் வாழிடங்களையும், உயிரினங்களையும் பாதுகாக்க தொடர் உறுதி மொழியை நான் சொல்ல மாணவ-மாணவிகளும், ஆசிரியர்களும் சொன்னார்கள். 


இந்த நிகழ்ச்சிக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர், சிவகாசி, விருதுநகர் பகுதியிலிருந்து நூறுக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் கலந்துகொண்டனர். ஆய்வரங்க வரவேற்பறையில் நன்னீர் பாதுகாப்பு தொடர்பான சில புத்தகங்களையும், வண்ண அட்டைகளையும் காட்சிக்கு வைத்திருந்தேன். பங்கேற்ப்பாளர்கள் பார்த்து பயன் பெற்றனர். இந்த பயிற்சிப் பட்டறைக்காக என்னை அழைத்த முனைவர். இசையரசு அவர்களுக்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும் என் நன்றிகள். நன்னீர் தகவல் பெட்டகத்தையும், பயிற்சி கையேட்டையும், வண்ண அட்டைகளையும் வழங்கிய ஜூ அவுட்ரீச் அலுவலகத்திற்கும், ஆசிரியர். தானியல் மற்றும் மாரிமுத்து அவர்களுக்கும் என் நன்றிகள். இந்த நிகழ்ச்சியை நடத்த உதவிய நண்பர் கிருஷ்ணகுமார் அவர்களுக்கும் என் நன்றி. 

அன்புடன் 
பிரவின் குமார் 
கோயம்புத்தூர்           

தொடரும் நம் சூழல் பயணங்கள் 28நன்னீர் பல்லுயிரியம் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி - கொடைக்கானல்

கடந்த சூன் 26ல் இரண்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக நான் கொடைக்கானலுக்கு சென்றிருந்தேன். இரண்டு நிகழ்ச்சிகளும் மிகவும் சிறப்பாக இருந்தது. இந்த நிகழ்ச்சியை "மேற்குத் தொடர்ச்சி மலை நன்னீர்  மேலாண்மையும், பாதுகாப்பும்" என்ற தலைப்பில் வடிவமைத்திருந்தேன். இந்த நிகழ்ச்சியை  ஜூ அவுட்ரீச் அமைப்பும், பழனி மலை பாதுகாப்பு இயக்கமும் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சி சிறப்பான சூழல் பள்ளிகளை ஏற்ப்படுத்துவதற்க்கான ஒரு நிகழ்வு ஆகும்

முதலாவது நிகழ்ச்சி கொடைக்கானல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. பள்ளித் தலைமையாசிரியர் அவர்களை சந்தித்துவிட்டு நாங்கள் மாணவர்களை சந்தித்தோம். ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் சுமார் 60 பேர் கலந்து கொண்டனர். முதலில் பழனி மலை பாதுகாப்பு இயக்கத்தின் திரு.அந்தோணி அவர்கள் அறிமுக உரையுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. அவர் பேசும்போது 'பள்ளிக்கு முன்னால் ஓடிக்கொண்டிருந்த ஆறு எப்படி சாக்கடையானது' என சொன்னார்கள்.  பின்பு பழனி மலை பாதுகாப்பு இயக்கத்தின் திரு. பாலா அவர்கள் தண்ணீர் மாசுபாடுகள் பற்றியும் பழனி மலை பாதுகாப்பு இயக்கத்தின் வேலைகள் மற்றும் தொடர் செயல்பாடுகள் குறித்தும் பேசினார்கள். 

அப்புறமாக நான் அனைவருக்கும் சந்தோசமாக ஒரு வணக்கத்தை சொல்லிவிட்டு, எல்லா குழந்தைகளின் பெயர், ஊர் மற்றும் கடைசியாக அவர்கள் சென்ற நன்னீர் ஸ்தலம்/இடம் பற்றி விரிவாக கேட்டு தெரிந்து கொண்டேன். பின்பு எல்லாரிடமும் அவர்கள் நன்னீரில் பார்த்த உயிரினங்களைப் பற்றிக் கேட்டு தெரிந்து கொண்டேன். பலரும் ஆர்வமாக பதில் தந்தனர். அவர்களின் சப்தத்தில் பக்கத்துக்கு அறை மாணவர்களும் எட்டி எட்டி பார்த்துவிட்டு சென்றனர். அப்படியே, நன்னீர் என்றால் என்ன? பூமியில் உள்ள நன்னீரின் அளவு போன்றவற்றை சொன்னேன். 
பின்பு நன்னீர் எனப்படும் நல்ல தண்ணீரின் பயன்கள் என்ன என்ன என்று அவர்களிடம் கேட்டேன். பின்பு தண்ணீர், தாவரங்கள் மற்றும் விலங்குகள் சூழ்ந்த வாழ்க்கை முறையைப் பற்றி சில உதாரனங்களுடன் சொன்னேன். முட்டை, வாழைப்பழம், பால், தர்பூசணி மற்றும் மனித உடலில் உள்ள தண்ணீரின் சதவிகித்தை சொன்னேன். அவர்கள் அடிக்கடி தண்ணீரில் பார்க்கும் உயிரினங்களின் பெயர்களை உரத்த குரலில் சொல்லச் சொன்னேன். பலரும் தட்டான், மண்புழு, பட்டாம்பூச்சி, மீன்கள், முதலை, நாரை, கொக்கு, பாம்பு, தவளை என சொல்லிக் கொண்டே போனார்கள். அவர்கள்சொல்ல மறந்ததை நான் சொல்லி நிறைவு செய்தேன். பின்பு இயற்கை நம் அன்னை என்ற வீடியோவைக் காட்டினேன். 
அப்படியே அவர்களை அடுத்த நிகழ்வான 'மனநிலையை புரிந்து கொள்ளுதல்' என்ற ஒன்றை வகுப்பிற்க்கு வெளியில் நடத்தினேன். இதில் பலரும் ஆர்வமாக கலந்து கொண்டு இந்த மலைகள், காடுகள் மேலுள்ள அன்பை நேரிடையாக விளக்கினர். பின்பு அனைவரையும் வகுப்பிற்குள் அழைத்து, நன்னீர் புதிர் என்ற செயல்பாட்டை நடத்தினேன். அப்படியே தண்ணீர் சுழற்சி பற்றிய செய்திகளை கதை போலச் சொன்னேன். 

பின்பு நல்ல தண்ணீர் ஆதாரங்கள் எவை எவை ? அவற்றில் நமது ஊரில் எவை உள்ளன ? எனக் கேட்டேன். பின்பு "எங்களால் இந்த பூமியில் வாழவே முடியவில்லை" என உரத்த குரலில் பேசும் மாணவர்களின் வீடியோ ஒன்றைக் காட்டினேன். அப்படியே மேற்குத் தொடர்ச்சி மலையின் சோலைக் காடுகளைப் பற்றி சொல்லிவிட்டு, நன்னீர் தாவரங்களும், அவைகளின் பயன்களும் பற்றி சொன்னேன். பின்பு சோலைக் காடுகளைக் காப்போம் என்ற வீடியோவை காட்டிவிட்டு அமர்ந்தேன். மாணவர்கள் பலரும் ஆர்வமாக இந்த அனைத்து செயல்பாடுகளிலும் கலந்துகொண்டனர். 
அப்புறமாக, தோழர். அந்தோணி அவர்கள் கொடைக்கானலில் எங்கெல்லாம் சோலைக் காடுகள் உள்ளன என்றும், இன்று வளர்ச்சியும், சுற்றுலாவும், அந்நிய வந்தேரி மரங்களின் ஆதிக்கத்தால் எப்படி சோலைக் காடுகள் அழிவில், ஆபத்தில் உள்ளன என்று விளக்கினார்கள். 
பின்பு நான் தண்ணீர் மாசடைதல் பற்றியும், தண்ணீர் பாதுகாக்க சில வழிமுறைகள் பற்றியும் சொன்னேன். பின்பு ஜூ அவுட்ரீச் அமைப்பு வழங்கிய நன்னீர் தகவல் பெட்டகத்தை அனைவருக்கும் வழங்கி அதில் உள்ள சில நன்னீர் மீன்கள், தட்டான்கள் மற்றும் நன்னீர் நத்தைகள் பற்றி விளக்கி கூறினேன். அப்படியே நன்னீர் பல்லுயிரியம் - பாதுகாப்பது நம் கடமை என்ற வாசகம் அடங்கிய அட்டையை அனைவரும் பார்த்து, படித்து உற்சாகமடைந்தனர். நன்னீர் பாதுகாப்பு உறுதிமொழியை நான் சொல்ல, அனைவரும் பின்னால் சொல்லி உறுதியுடன் அமர்ந்தனர். கடைசியாக நண்பர். கார்த்திக் ராஜா, அவர்கள் நன்றியுரையுடன் இந்த நன்னீர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி முடிந்தது. 


மிக எளிமையான அறிவியலுடன், அதிகமான செயல்பாடுகளுடன் இருந்த இந்த நிகழ்ச்சி நிச்சயம் மாணவர்களுக்கு ஒரு அடிப்படை நன்னீர் உயிரிகள் பற்றியும், சோலைக் காடுகள் பற்றியும், தண்ணீர் பாதுகாப்பு பற்றியும் ஒரு புரிதலை ஏற்படுத்தியிருக்கும் என நான் நம்புகிறேன்.  


மதிய உணவிற்குப் பிறகு நாங்கள் "என் சத்ய சுரபி" பள்ளிக்கூடத்திற்கு சென்றோம். பள்ளித் தாளாளர் பத்மினி மணி அவர்களைச் சந்தித்து விட்டு, அவர்களின் அறிமுக உரையுடன் இந்த "நன்னீர் - பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்கள். நான் என்னை அறிமுகம் செய்துகொண்டு, அனைத்து குழந்தைகளின் பெயர், வகுப்பு, ஊர், கடைசியாக பார்த்த/சென்ற நன்னீர் இடம் பற்றி சொல்ல சொன்னேன். இதில் பல குழந்தைகள் அருவியில் குளித்த அனுபவங்களையும், ஏரிக் கரையில் அமர்ந்து மீன்களையும், பறவைகளையும் பார்த்து ரசித்ததையும் பகிர்ந்து கொண்டனர். 
மேலும் அவர்கள் சமீபத்தில் சென்ற இன்பச் சுற்றுலாவில் அவர்கள் கண்டு கழித்த பசுமையான இடங்களையும் சொல்லி மகிழ்ந்தனர். பின்பு, மேற்குத் தொடர்ச்சி மலை பற்றியும்,அங்குள்ள சில நன்னீர் உயிரிகள் பற்றியும் சொன்னேன். நன்னீர் என்றால் என்ன ?நமக்கு நன்னீர வழங்கும் ஆதாரங்கள் எவை எவை எனச் சொன்னேன். தண்ணீர் நமக்கு அடிப்படை ஆதாரம் என சொல்லி, ஒரு திறனாய்வு மதிப்பீடு என்ற ஒரு செயல் பாட்டை வகுப்பிற்கு வெளியில் நடத்தினேன். இதில் குழந்தைகள் சிறப்பாக கலந்து கொண்டனர். 
பின்பு அனைவரையும் 7 குழுக்களாகப் பிரித்து, குழுவிற்கு ஒரு குழுத் தலைவரை தேர்ந்தெடுத்தேன். ஓவ்வொரு குழுவிற்கும் நன்னீர் விலங்குகள் உள்ள சிறிய அட்டைகளைக் கொடுத்து அவற்றை இணைக்க செய்யும் ஒரு "புதிர் விளையாட்டை" விளையாடச் சொன்னேன். அனைவரும் சிறிது நேரம் எடுத்துக் கொண்டு அனைத்து குழுக்களும் படங்களை இணைத்திருந்தர்கள். அப்புறமாக, குழுத்தலைவர் முன்னால் வந்து அந்த விலங்கின் நன்மைகளை சொல்லிவிட்டு கைத்தட்டல்களுடன் அமர்ந்தனர். அவர்களுக்கு மேலும் புரியும் வண்ணம் வகைப்பாடு என்ற ஒரு நிகழ்வை நடத்தினேன். 
பின்பு சோலைக் காடுகள் குறித்தும், நன்னீர் மீன்கள், தட்டான்கள், நத்தைகள் மற்றும் தாவரங்கள் குறித்தும், அவற்றின் சூழல் நன்மைகள் குறித்தும் சொன்னேன். சேகர் தத்தாத்ரி அவர்களின் சோலைக் காடுகளை காப்போம் என்ற வீடியோவை காட்டினேன். மாசுபாடுகள் பற்றி சொல்லிவிட்டு அமர்ந்தேன். 
தொடர்ந்து, திரு.அந்தோணி அவர்கள் தண்ணீர் தரம் அறியும் எளிய முறைகள் பற்றியும், நன்னீர் பாதுகாக்கும் உக்திகள் பற்றியும் சொன்னார்கள். அப்படியே நன்னீர் தகவல் பெட்டகத்தில் உள்ள வண்ண வண்ண மீன்களையும்,தட்டான்களையும் பார்த்து, அறையில் இருந்த நன்னீர் மீன்கள், தட்டான்கள், நன்னீர் முகமுடிகள் உள்ள அட்டைகளையும், வண்ண படங்களையும் பார்த்து விட்டு அமர்ந்தனர். 
அனைவரும் சேர்ந்து நன்னீர் பாதுகாப்பு தொடர் உறுதி மொழியை எடுத்துக் கொண்டோம். கடைசியாக தோழர். கார்த்திக் ராஜா அவர்கள் நன்றியுரையில் பேசும் போது, நாம் அனைவரும் எடுத்த இந்த உறுதி மொழியை நாம் கடைபிடிக்க முயற்சி செய்ய வேண்டும் எனக் கூறினார்.       
மெல்லிய பியானோ இசையின் பாடலுடன், மாணவ - மாணவிகளின் நன்றிகளுடன் இந்த மாலைப் பொழுதில் நிகழ்ச்சி முடிந்தது. இந்த பள்ளியின் தாளாளர். பத்மினி மணி அவர்கள் எனக்கு 'சர் டேவிட் அட்டன்ப்ரோ அவர்களின் The state of the Planet' என்ற குறுந்தகட்டை வழங்கினார்கள். அனைவருக்கும் நன்றியை சொல்லிவிட்டு குழந்தைகளுடன் பேசிக் கொண்டிருந்தேன்.      

இந்த நிகழ்சிக்காக அழைத்த தோழர்.கார்த்திக் ராஜா, பழனி மலை பாதுகாப்பு இயக்கம், அவர்களுக்கு என் நன்றிகள். என் ஜூ அவுட்ரீச் அலுவலகத்திற்கும் என் நன்றிகள். எளிய முறையில் வன விலங்கு பாதுகாப்பு கருத்துக்களை வழங்க உதவிய முனைவர். தானியல் மற்றும் திரு. மாரிமுத்து அவர்களுக்கும் என் நன்றிகள். கொடைக்கானல் அரசுப் பள்ளி மற்றும் என் சத்ய சுரபி பள்ளி தலைமை  ஆசிரியர்களுக்கும், சக ஆசிரியைகளுக்கும்  என் நன்றிகள். 

பகிர்தல்கள்:

இந்த வகுப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த நன்னீர் வகைப்பாடு, புதிர் மற்றும் மாசுபாடுகள் பற்றி சொன்னவைகள் எனக்கு எளிமையாக புரிந்தது. நமது காட்டையும், அங்குள்ள பல தாவர, விலங்குகளையும் பாதுகாக்க நிச்சயம் நான் உதவுவேன் என்று ஒரு மாணவன் சொன்னான். 
இந்த பள்ளி மாணவர்கள் அனைவரும் தீவிரமாக எதையும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலும், ஆர்வத்திலும் உள்ளதை பார்க்க முடிந்தது. இந்த சிறப்பான மாணவர்கள், மிக சிறப்பான செயல்களைச் செய்வார்கள். நம்முடைய இந்த ஒரு சிறிய நிகழ்ச்சி, நிச்சயம் இந்த மாணவர்களிடத்தில் காட்டுயிர் கரிசனத்தையும், நன்னீர் அவசியத்தையும் புரிய வைத்திருக்கின்றது.  

ஒரு விதை -- வெளிச் சூழல் எப்படி இருந்தாலும் இங்கே மரமாகும்.  

அன்புடன்
பிரவின் குமார் 
கோயம்புத்தூர்                 

தொடரும் நம் சூழல் பயணங்கள் 27நம்மாழ்வாரின் வானகத்தில் ஒரு நாள் 

கடந்த மாதத்தில் ஒரு நாள் "காட்டுயிர்கள் குறித்த ஒரு நாள்" விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக கரூர் அருகே உள்ள கடவூர் கிராமத்தில் உள்ள நம்மாழ்வார் அய்யாவின் வானகத்திற்க்குச் சென்றிருந்தேன். அந்த ஊரின் இயற்கை சூழல் என்னை மிகவும் கவர்ந்தது. மூன்று புறமும் மலைகளால் சூழப்பட்ட, பச்சை பசேலென இருந்தது அந்த இடம். பத்து நாள் "குழந்தைகளுக்கான புத்தாக்கப் பயிற்சி" நடைபெற்றது

இதில் ஒரு நாள், வனங்களை பற்றியும் அங்குள்ள விலங்குகளைப் பற்றியும் இந்த குழந்தைகளுடனும் மிகவும் வித்தியாசமான முறையில் சொல்லவும், பலவித செயல்பாடுகளுடன் கூடிய வகுப்பை நடத்தவும் நான் சென்றிருந்தேன். அதிகாலையில் நான் சென்றுவிட்டேன். திரு. ஏங்கல்ஸ் அவர்களை பார்க்க காத்திருந்தேன். அவர்கள் வர தாமதமாகும் என்றனர். 

அப்படியே நான் இந்த கானகத்தை சுற்றிப் பார்க்கலாம் என ஆசைப்பட்டேன். மெதுவாக சூரிய வெளிச்சத்தை பார்த்துக்கொண்டே பண்ணையை சுற்றினேன். மிக தெளிவாக, சரியாக திட்டமிடப்பட்ட இடம் இது என எனக்கு தோன்றியது. மரம், செடி, படரும் சிறுகொடி, தானியங்கள் என செழுமையாக இருந்தது இந்தப் பண்ணை. சிறிய சிறிய இடைவெளியில் கூட கற்றாழை வளர்க்கிறார்கள். அடுத்து நம் நாட்டு இன ஆடுகளைப் பார்த்தேன். பின்பு அவற்றை தொட்டுப் பார்த்துப் பரவசமாகினேன். மிகப் பெரிய காது உள்ள இந்த இன ஆடுகளுக்கு கொம்பு சற்று வித்தியாசமாதான் இருந்தது. சிறிது நேரம் அவைகளுடன் இருந்து விட்டு மெதுவாக நடந்தேன். அப்படியே மாணவர்களின் தப்பாட்டம். பறை சப்தம் மற்றும் சிலம்பத்தைப் பார்த்து லயித்துப் போனேன். அப்படியே நம்மாழ்வார் அவர்கள் வாழ்ந்த அறை, வாங்கிய பரிசுகள் மற்றும் அவருடைய சில அரிய புகைப்படங்களை பார்த்தேன். அய்யாவின் சமாதியைப் பார்த்து வணங்கிவிட்டு, அதன் மேல் வேகமாய் வளர்ந்து கொண்டிருக்கும் மரங்களை பார்த்தேன். அரை மணி நேர ஓய்விற்குப் பிறகு நான் கிளம்பினேன். வகுப்பிற்க்குத் தயாரானேன். 

மூலிகை பானம் மற்றும் கஞ்சியை சாப்பிட்டு விட்டு நான் நிகழ்ச்சி நடக்கவிருக்கும் அறைக்கு சென்றேன். ஒரு சில மாணவர்களின் உதவியுடன் நாங்கள் வகுப்பை சுத்தம் செய்தோம். கொஞ்ச நேரத்திலே வகுப்பு பளிச்சென ரெடி. நான் கொண்டு வந்திருந்த வண்ண வண்ண விலங்கு அட்டைகளையும், விலங்கு முகமுடிகளையும், புத்தகங்களையும், சில சிறுவர் புத்தகங்களையும் பார்வைக்கு வைத்தேன். நேரம் செல்ல செல்ல மாணவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வகுப்பிற்குள் வந்தனர்.  தமிழ் நாட்டின் பல பகுதிகளிலிருந்து மாண-மாணவிகள் வந்திருந்தார்கள். அவர்கள் அனைவரையும் வட்டமாக அமர வைத்து அவர்களின் பெயர், வகுப்பு, ஊர், பிடித்த விளையாட்டு போன்றவற்றை கேட்டேன். பலரும் ஆர்வமாக பதில் தந்தனர். காடுகளின் வகைகள், உணவு சங்கிலி பற்றியும், ஐந்து வகை உயிர் குழுக்கள் பற்றியும் சொன்னேன்.

இந்திய காடுகள் பற்றி சொல்லிவிட்டு, புல்வெளிகள் மிகுந்த சூழலில் வாழும் சில விலங்குகளின் உதாரணங்களை சொன்னேன். தமிழகத்தின் சில பாலுட்டிகளைப் பற்றி சொல்லிவிட்டு ஒரு புதிர் விளையாட்டை மாணவர்களை விளையாடச் செய்தேன். மேலும் புதிரில் அவர்கள் கண்டறிந்த விலங்குகளைப் பற்றி பேச செய்தேன். இதில் பெரும்பாலும் பாலுட்டிகளும், பறவைகளும் இருந்ததால் மாணவர்கள் எளிமையாக பேசினார்கள். நான் அவர்களுக்கு தெரியாத விசயங்களான அவற்றின் எண்ணிக்கை, வழங்கு பெயர், காணப்படும் இடங்கள், சூழல் நன்மைகள் மற்றும் அவற்றின் அச்சுறுத்தல்கள் பற்றியும் சொன்னேன். 


எங்களால் இந்த உலகில் வாழவே முடியவில்லை என சொல்லும் குழந்தைகளின் வீடியோ ஒன்றையும் காட்டினேன். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு "பூண்டோடு உயிரிகள் அற்று போகுதல்" (Extinction) பற்றி சொன்னேன். பின்பு வௌவால் வகுப்பை துவக்கினேன். இதில் பங்கேற்பாளர்களை ஆறு குழுக்களாக பிரித்து அவர்களுக்கு வௌவால் தகவல் பெட்டகதையும், வௌவால் அட்டைகளையும் வழங்கினேன். குழுவிற்கு ஒரு குழு தலைவரை நிர்ணயித்தேன். 


பின்பு வௌவால்களின் வகைகள், இந்தியாவில் காணப்படும் வௌவால் இனங்கள், நமது பகுதியில் காணக்கூடிய இனங்கள், அரிய வௌவால் பற்றியும் சொன்னேன். வௌவால் எப்படி பறக்கின்றது, உலகின் / இந்தியாவின் பெரிய சிறிய வௌவால் எவை? இடப்பெயர்ச்சி, சூழலுக்கு செய்யும் நன்மைகள், வௌவால் இனங்கள் அழிவிற்கு காரணங்கள் பற்றியும் சொன்னேன். 

பின்பு பங்கேற்பாளர்களுக்கு பத்து நிமிட இடைவெளிக்கு பிறகு குழுத் தலைவர்களை வௌவால் பற்றி பேசச் செய்தேன். குழந்தைகள் மிகவும் ஆர்வமாக, நிறைய தகவல்களை சொன்னார்கள். பலர் அவர்கள் தனிப்பட்ட அனுபவத்தை சொல்லிவிட்டு, கைதட்டல்களை பெற்றனர். பின்பு வௌவால் பற்றிய சில கட்டுக்கதை / மூடநம்பிக்கைகளை பற்றியும், அறிவியல் உண்மைகளையும் சொன்னேன். 

வௌவால் போன்ற சிறிய, அதிசய உயிரினங்களை பாதுகாக்க தொடர் உறுதி மொழியை சொல்லிவிட்டு, ஒரு சிறிய வீடியோவுடன் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டேன். இந்த நிகழ்ச்சியில் அறுபது குழந்தைகள் கலந்து கொண்டனர்.  

இந்த நிகழ்ச்சி அறையில் வைத்திருந்த 'வௌவால் புகைப்பட கண்காட்சியை' மாணவர்கள் பார்த்து பயன் பெற்றனர். குழந்தைகளுடன் பேசிகொண்டே இருந்தேன்...அவர்களுடனே சாப்பிட்டுவிட்டு, கோயம்புத்தூரை நோக்கி கிளம்பினேன். 


பாலுட்டிகள் குறித்த இந்த நிகழ்ச்சி நடத்த உறுதுணையாய் இருந்த தோழர் கார்த்திக் ராஜா, அஜாய் ராஜா, ஏங்கல்ஸ் ராஜா மற்றும் நம்மாழ்வார் அய்யாவின் வானகத்தில் உள்ள தோழர்களுக்கும் என் நன்றிகள்.            

வௌவால் குறித்த தகவல் பெட்டகத்தை வழங்கிய என் அலுவலகதிற்கும், வௌவால் தமிழாக்க புத்தகத்தை எனக்கு அளித்த திரு. மாரிமுத்து அவர்களுக்கும் என் நன்றிகள்.  


சிறிய விலங்குகளை பாதுகாக்க, கொண்டாட வேண்டிய நேரம் வந்துவிட்டது. 

வாருங்கள் .. உலகில் உள்ள எல்லா உயிரிகளையும் ஓரே போல பாப்போம்...மதிப்பளிபோம். காப்பாற்ற முயல்வோம்....முடிந்தவரை நமது பகுதியில் அழிவில் \ ஆபத்தில் \ அச்சுறுத்தலில் உள்ளவற்றை பாப்போம்..பாதுகாப்போம்.   

அன்புடன் 
பிரவின் குமார் 
கோயம்புத்தூர் 


தொடரும் நம் சூழல் பயணங்கள் 26


நீயா நானா ? சூடான விவாதம் 


கடந்த ஜூன் 1ம் தேதி நான் விஜய் தொலைக்காட்சி "நீயா நானாவில்" கலந்து கொள்ள சென்னை சென்றிருந்தேன். இந்த நிகழ்ச்சியில் விவாதம் பிராணிகளை வளர்க்கும், வன விலங்கு ஆராய்ச்சி செய்யும் தரப்பிற்கும் பொது மக்களுக்கும் இடையே மிகவும் கார சாரமாக நடந்தது. நான் பொது மக்களின் பக்கம் அமர்ந்திருந்தேன். அதிகம் நான் பேசவில்லை என்றாலும் அனைவரின் பேச்சை கேட்டேன். சிறப்பாக இருந்தது. உண்மையான விலங்கு நல ஆர்வலர்களை சற்றே அசைத்து பார்த்துவிட்டது இந்த நிகழ்ச்சி. 

இந்த நிகழ்விற்காக என்னை அழைத்த விஜய் தொலைக்காட்சி நீயா நானா குழுவிற்கு என் நன்றிகள்.       

அன்புடன் 
பிரவின் குமார் 
கோயம்புத்தூர்