About

Sunday 17 August 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள் 29

நன்னீர் பல்லுயிரியம் - பயிற்சி பட்டறை, சிவகாசி    

இந்த மாதம் 1ம் தேதி, சிவகாசி அய்யா நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி விலங்கியல் துறையும், கோயம்புத்தூர் ஜூ அவுட்ரீச் அமைப்பும் இணைந்து ஒரு நாள் "பிராந்திய நன்னீர் பல்லுயிரிய பாதுகாப்பு பயிற்சிப் பட்டறையை"  கல்லூரி ஆய்வரங்கில் நடந்தது. இந்த நிகழ்ச்சியை இளங்கலை விலங்கியல் துறை தலைவர், முனைவர். இசையரசு அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்த நிகழ்ச்சயில் நான் கலந்து கொண்டு மதிய நிகழ்வுகளை நடத்தினேன். கல்லூரியின் தாளாளர் திரு. அய்யன் கோடீஸ்வரன், கல்லூரியின் முதலவர், முனைவர். பாண்டியராஜன், சிறப்பு அழைப்பாளர் முனைவர். ஹனீபா (செயின்ட் சேவியர் கல்லூரி, பாளையங்கோட்டை), முனைவர் ராஜன் மற்றும் முனைவர். இசையரசு பயிற்சிப் பட்டறையின் விளக்க நூலை வெளியிட்டு பேசினார்கள். 



முனைவர். ஹனீபா "நன்னீர் மீன்களும் நன்னீர் நிலைகளும்" என்ற தலைப்பில் பேசும்போது, கடந்த சில வருடங்களாக அரிய நன்னீர் மீன்கள் எப்படி அழிந்தது, நன்னீர் மீன்களில் உலகளாவிய பரவல், உள்ளூர் பரவல், வகைகள், அதிகம் உணவிற்காக பெறப்படும் மீன்கள் போன்ற தகவல்களை அவருக்கே உரித்தான எளிமையான பாணியிலே விளக்கி கூறினார். 



தொடர்ந்து, சிவகங்கை  ராஜா துரைசிங்கம் விலங்கியல் துறை பேராசிரியர் முனைவர்.சுரேஷ் குமார் அவர்கள் "நன்னீர் வாழிடங்களைப் பாதுகாத்தல்" என்ற தலைப்பில் பேசினார்கள். நன்னீர் சூழல் மிகப் பெரிய அளவில் மனிதனுக்கும் மற்ற ஜீவிகளுக்கும் உதவி செய்கின்றது, இன்றைய வளர்ச்சி நன்னீர் வாழிடங்களையும், அதை சார்ந்துள்ள விலங்குகளையும், தாவரங்களையும் அழிக்கின்றன என்றார். 

பின்பு மாசுபாடுகள், நன்னீர் மேலாண்மை குறித்தும் பேசினார்கள்.      

மதிய உணவிற்குப் பிறகு நான் நன்னீர் பல்லுயிரியத்தின் அவசியத்தை விளக்கினேன். பின்பு மேற்குத் தொடர்ச்சி மலையைப் பற்றி சொல்லிவிட்டு, அனைவரையும் எட்டு குழுக்களாகப் பிரித்து மேற்குத் தொடர்ச்சி மலை பற்றிய ஒரு வரைபட செயல்பாட்டை செய்தேன். தொடர்ந்து ஆறுகள் பற்றிய ஒரு செயல்பாட்டை செய்தேன். பின்பு ஆறுகள் பற்றி சொல்லிவிட்டு, நன்னீர் சூழல் வகைகள் அடங்கிய ஒரு செயல்பாட்டை செய்தேன்.         



பின்பு அவர்கள் பகுதியில் காணும் நன்னீர் தட்டான்கள் மீன்கள் குறித்த வண்ண அட்டையை காட்டி விளக்கினேன். நன்னீர் தகவல் பெட்டகத்தை பார்த்து, அதில் உள்ள தகவல்களை சிறிது தெரிந்து கொண்டார்கள்.  மேற்குத் தொடர்ச்சி நன்னீர் பல்லுயிரியம் என்ற வாசகம் அடங்கிய ராக்கியை அருகில் உள்ளவர்களின் கையில் கட்டினார்கள். மாசுபாடுகள் மூலமாக அரிய நன்னீர் மீன்கள், நத்தைகள் எப்படி அழிவில் உள்ளன என்றும் சொன்னேன். நீங்கள் என்ன செய்யலாம் என்று சில துணுக்குகளை சொன்னேன். 




நன்னீர் வாழிடங்களையும், உயிரினங்களையும் பாதுகாக்க தொடர் உறுதி மொழியை நான் சொல்ல மாணவ-மாணவிகளும், ஆசிரியர்களும் சொன்னார்கள். 


இந்த நிகழ்ச்சிக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர், சிவகாசி, விருதுநகர் பகுதியிலிருந்து நூறுக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் கலந்துகொண்டனர். ஆய்வரங்க வரவேற்பறையில் நன்னீர் பாதுகாப்பு தொடர்பான சில புத்தகங்களையும், வண்ண அட்டைகளையும் காட்சிக்கு வைத்திருந்தேன். பங்கேற்ப்பாளர்கள் பார்த்து பயன் பெற்றனர். 



இந்த பயிற்சிப் பட்டறைக்காக என்னை அழைத்த முனைவர். இசையரசு அவர்களுக்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும் என் நன்றிகள். நன்னீர் தகவல் பெட்டகத்தையும், பயிற்சி கையேட்டையும், வண்ண அட்டைகளையும் வழங்கிய ஜூ அவுட்ரீச் அலுவலகத்திற்கும், ஆசிரியர். தானியல் மற்றும் மாரிமுத்து அவர்களுக்கும் என் நன்றிகள். இந்த நிகழ்ச்சியை நடத்த உதவிய நண்பர் கிருஷ்ணகுமார் அவர்களுக்கும் என் நன்றி. 

அன்புடன் 
பிரவின் குமார் 
கோயம்புத்தூர்           

0 comments:

Post a Comment