About

Tuesday 3 December 2013

தொடரும் நம் சூழல் பயணங்கள்: VIII

தொடரும் நம் சூழல் பயணங்கள்: VIII.

நன்னீர் சூழலியல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: தென்காசி

கடந்த நவம்பர் முதல் வார ஞாயிறு (3/11/2013) அன்று தென்காசி ஆய்குடி அமர் சேவா சங்கத்திற்கு ஒரு நாள் 'நன்னீர் சூழலியல் விழிப்புணர்வு' நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன். மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள நன்னீர் ஆதாரங்கள், தகவல்கள், பலவகைப்பட்ட உயிரினங்கள் பற்றி சொல்லவே சென்றிருந்தேன். முதலில் அமர் சேவா சங்கத்தின் முக்கிய பொறுப்பில் உள்ள திருமதி. சுமதி அவர்களை சந்தித்துவிட்டு வகுப்பிற்குள் சென்றேன். நிகழ்ச்சியை வகுப்பாசிரியை துவக்கி வைத்தார். 

நான் என்னை அறிமுகம் செய்துவிட்டு அவர்களின் பெயர், வகுப்பை கேட்டு தெரிந்து கொண்டேன். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நன்னீர் வழங்கும் முக்கியமான ஆறுகளில் ஒன்றான தாமிரபரணி பற்றியும், இங்குள்ள அணைகள் மற்றும் கிளை நதிகள் பற்றியும் சொன்னேன். பின்னர் அவர்கள் நன்னீரில் பார்த்த விலங்குகள், சிறு பூச்சிகள் பற்றி கேட்டு அறிந்தேன். அவர்களில் பலர் மிக நீண்ட வரிசையாக பட்டியலிட்டனர். தேங்கி உள்ள மற்றும் ஓடும் நன்னீர் பற்றி சொல்லிவிட்டு, மேற்குத்தொடர்ச்சிமலையையும், அவைகள் மனித சமுதாயத்திற்கு வழங்கி வரும் சேவைகளை பற்றியும், அவற்றின் அளப்பரிய, எண்ணிலடங்கா விலங்கு குழுக்களையும் பற்றி சொன்னேன்.
அவர்கள், இந்த மலையைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் வண்ணம் இருந்த அனைவரையும் ஐந்து குழுக்களாக பிரித்து மேற்குத்தொடர்ச்சிமலையின் வரைபட நிகழ்வை நடத்தினேன். இதில் அனைவரும் மிக ஆர்வமாக கலந்துகொண்டு படங்களை இணைத்தனர்.ஒவ்வொரு குழுவினரும் மேற்குத்தொடர்ச்சிமலை உள்ள மாநிலங்களை வகைபடுத்தி, அவற்றின் பெயர்களை எழுதினார்கள். அனைத்து குழுக்களும் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். 



பின்னர் மேற்குத்தொடர்ச்சிமலையில் உற்பத்தியாகும் முக்கிய ஆறுகள் கொண்ட வரைபடத்தை இணைத்தனர். இதில் ஆறுகளின் பெயர்களை எழுதினர். இதில் எல்லா குழுவினரும் மிக வேகமாக வரைபடத்தை இணைத்து கலந்து கொண்டனர்



நன்னீர் தேவை, பற்றாக்குறை பற்றி ஒரு சில கருத்துக்களை சொல்லிவிட்டு உயிரினங்களின் வகைப்பாடு என்ற நிகழ்வை ஐந்து குழுக்களிடையில் செய்தேன். இதில் ஓவ்வொரு குழுக்களிடமும் பல தாவர, விலங்கு அட்டைகளை கொடுத்தேன். அதை அவர்கள் விரும்பிய படி வகைப்படுத்த சொன்னேன். சில உதாரணம் கொடுத்தேன்
1. நீரில் வாழ்பவை, நிலத்தில் வாழ்பவை
2. தாவர உண்ணி, ஊன் உண்ணி மற்றும் அனைத்துண்ணி 
3. காட்டில் உள்ளவை, வீட்டில் உள்ளவை 
அவர்கள் அனைவரும் தத்தம் குழுவிலுள்ள அனைவரிடமும் கலந்தாலோசித்துவிட்டு, மிக சிறப்பாக உயிரினங்களை வகைப்படுத்தியிருந்தர்கள். கடைசியாக முதுகெலும்பு உள்ளவை மற்றும் முதுகெலும்பு அற்றவை என்ற முறையில் வகைப்படுத்த சொன்னேன்பின்னர் அனைத்து குழுக்களும் தங்கள் வகைப்படுத்தியிருந்த பட்டியலை சொல்லி கைதட்டல்களை பெற்றனர். நமது காட்டில் உள்ள பல வகைப்பட்ட அரிய தாவர, விலங்குகளை பற்றி சொல்ல அவர்களுக்கு அதிகம் தெரிந்த, பார்த்த நன்னீர் தாவரங்கள், மீன்கள், தட்டான்பூச்சிகள் மற்றும் நத்தைகள் பற்றி செய்திகளை வண்ண அட்டைகள் மூலமாக சொன்னேன்.
குறிப்பாக 1. நம் பகுதியில் அழிவில் உள்ள நன்னீர் தாவரங்கள் 2. ஏன் தண்ணீர் அவசியம் தட்டான்களின் இனப்பெருக்கத்திற்க்கு 3. மெல்லுடலிகள் எனப்படும் சிப்பிகள், நத்தைகள், மட்டிகள் எப்படி உண்கிறதுஏன் அழிவில் உள்ளது? அரிதாக காணமுடிகிறது? 4. எப்படி பூச்சிக்கொல்லிகள் அரிய வகை மீன் இனத்தை பூண்டோடு அற்று போக செய்கிறது என்று சொன்னேன்.
பின்னர் நான்கு குழுக்களுக்கும் மேற்குத்தொடர்ச்சி மலையில் வாழும் நன்னீர் மீன்கள் மற்றும் தட்டான்கள் கலர் படங்களை கொடுத்தேன். அனைவரும் இந்த படங்களை உற்று நோக்கி, அவர்கள் பகுதியில் பரவலாக காணக்கூடிய நன்னீர் மீன்கள் மற்றும் தட்டான் பூச்சிகளை சொன்னார்கள். 





பின்பு அனைவருக்கும் ஜூ அவுட்ரீச் அர்கனைசேஷன் வழங்கிய மேற்குத்தொடர்ச்சி மலை நன்னீர் பல்லுயிரியம் தகவல் பெட்டகம் வழங்கினேன். 



இதில் உள்ள "மேற்குத்தொடர்ச்சி மலை - நன்னீர் பாதுகாப்பு" என்ற எழுத்து உள்ள ராக்கியை தங்கள் அருகில் உள்ளவர்களின் கைகளில் கட்டிவிட்டார்கள். பின்னர் நன்னீர் சூழல் கையேட்டை திறக்க சொல்லி அதில் உள்ள மாசுபாடுகள் மற்றும் மேலாண்மை என்ற பகுதியை வாசிக்க சொன்னேன். 



அனைவரும் பின்பு அனைவருக்கும் மேற்குத்தொடர்ச்சி மலை நன்னீர் சூழலியம் "பாதுகாப்பது நம் கடமை" என்று உறுதிமொழி எடுத்து கொண்டனர். கடைசியில் அழிவில் நம் பசுங்காடுகள் என்ற ஒரு வீடியோவை காண்பித்தேன். நிகழ்ச்சியை வகுப்பு ஆசிரியர் நிறைவு செய்து வைத்தார். 



இந்த நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது, மிக முக்கியமாக இதில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே மாற்றுத் திறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. எப்போதுமே வகுப்பில் புத்தகங்களுக்கிடையிலும், வளாகத்தில் மரங்களுகிடையிலும் சுற்றி வரும் இந்த அன்பு குழந்தைகளுக்கு நிச்சயம் இந்த நிகழ்ச்சி புதுமையாய் இருந்திருக்கும். நம் நன்னீர் சூழியலை பற்றி அவர்களுக்கு சொல்லிக் கொடுத்ததில் நான் மிக மகிழ்ச்சி அடைந்தேன்.  

சில பகிர்தல்கள்:
பங்கேற்ற பலருக்கு நன்னீர் தாவரத்தின் ஆறு வகைகள் எளிமையாக புரிந்ததாகவும், மீன் படம் போட்ட கலர் போஸ்டர் பயனுள்ளதாகவும், உயிரினங்களின் வகைப்பாடு நிகழ்வு புதிதாக இருந்ததாகவும் சொன்னார்கள்.
ஆய்குடி அமர் சேவா சங்கத்தில் உள்ள மதிப்பிற்குரிய சங்கர ராமன் அவர்களை சந்தித்து விட்டு, அக்ரஹாரதில் வசிக்கும் உயர்திரு ராமகிருஷ்ணன் அவர்களையும் பார்த்துவிட்டு மழைச்சாரலில், மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினேன். 
இந்த நிகழ்சிக்காக நன்னீர் சூழல் தகவல் பெட்டகத்தை வழங்கிய ஜூ அவுட்ரீச் அர்கனைசேஷன் மற்றும் என் ஆசிரியர்கள் டேனியல் மற்றும் மாரிமுத்து அவர்களுக்கு என் நன்றிகள்.

நன்றியுடன் 
பிரவின்  

0 comments:

Post a Comment