About

Monday 21 October 2013

தொடரும் நம் சூழல் பயணங்கள் V. "வௌவால்கள் முக்கியத்துவம்"


தொடரும் நம் சூழல் பயணங்கள் V


கடந்த சனிக்கிழமை (05/10/2013) அன்று அட்டப்பகவுண்டன்புதூர் (கோவை) அரசு நடுநிலைப்பள்ளியில் "வௌவால்கள் முக்கியத்துவம்" என்ற தலைப்பில் பள்ளிக் குழந்தைகளுக்கு ஒரு நிகழ்ச்சி நடத்தினேன். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மிக எளிமையான அறிமுகத்துடன் வௌவால் வகுப்பு தொடங்கியது. 

இந்த நிகழ்வு இந்திய வன உயிரின வார விழாவின் ஒரு நிகழ்வாகவே கருதினேன். அதிகம் அறியபடாத, கவனம் செலுத்தபடாத சிறிய பாலூட்டிகளைப் பற்றி சில விவரங்களை சொல்லவும், ஒரு சிறிய வீடியோவை காட்டவும் நான் சென்றிருந்தேன். குழந்தைகள் அனைவரும் ஆர்வமாக தங்கள் பெயர், வகுப்பு, கடைசியாக பார்த்த விலங்கு, அவர்கள் பார்க்க விரும்பும் விலங்கு ஆகியவற்றை சொன்னார்கள். பின்னர் நம்மை சுற்றி உள்ள விலங்குகளையும், அவற்றின் ஒரு சில சிறப்பம்சங்களையும் சொல்லிவிட்டு, காடுகளும், இந்த இயற்கை சூழலும் நமக்கும் அளிக்கும் நன்மைகளை சொன்னேன். 

விலங்குகளின் பங்கு மற்றும் உணவு சங்கிலியை ஒரு சிறிய பாடல் மூலம் எல்லாரும் சேர்ந்து சொல்லிவிட்டு, ஐந்து வகை உயிர் குழுமங்களை பற்றி சொன்னேன். அழிவில் நம் பசுங்காடுகள் என்ற வீடியோவை காண்பித்துவிட்டு, அனைவரையும் ஆறு குழுக்களாக பிரித்து "பிடித்த விலங்கு" என்ற தலைப்பில் ஓவியம் வரைய செய்தேன். அனைவரும் மிக சிறப்பாக ஓவியத்தை வரைந்தார்கள். 





அதில், யானை, குருவி, புழு மற்றும் வௌவால் போன்றவை இருந்தது. ஒவ்வொரு குழு தலைவரும் இந்த ஓவியத்தை காண்பித்துவிட்டு அந்த விலங்கின் முக்கியதுவத்தை சொல்லிவிட்டு சென்றார்கள். 








அப்புறமாக, வௌவால்கள் பற்றிய கேள்வி பதில் நிகழ்ச்சியை மரத்தடியில் நடத்திவிட்டு மீண்டும் அனைவரையும் குழுக்களாக பிரித்து அவர்களுக்கு Zoo Outreach Organization வழங்கிய தகவல் பெட்டகத்தை கையில் கொடுத்தேன். அதில் உள்ள பல அட்டைகளையும், புத்தகத்தையும், ஸ்டிக்கரையும் காண்பித்து விளக்கிவிட்டு, நான் வௌவால் பற்றிய பல செய்திகளை சொன்னேன். மிக சுலபமாக புரியும் வண்ணம், எளிய தமிழில், எடுத்துகாட்டுகள் மூலம் சொன்னேன். 









இந்த மாணவர்களுக்கு பத்து நிமிடம் நேரம் கொடுத்தேன். பின்னர் குழு தலைவர்கள் வந்து, அவர்கள் வௌவால் பற்றி புரிந்து கொண்டதை அனைவர் முன்னாலும் பகிர்ந்து கொண்டனர். அதிகமான செய்திகளை சொன்ன குழுவிற்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 




வௌவால்கள் பற்றிய சில புரிதல்கள்: 

1. உலகில் குட்டி போட்டு பால் கொடுக்கும், பறக்கும் பாலூட்டி வௌவாலே ஆகும். 

2. உலகில் நான்கில் ஒரு பங்கு பாலூட்டிகள் வௌவால் ஆகும்.

3. வௌவாலில் இரண்டு வகை உள்ளது, 1. பழம்தின்னி வௌவால்கள் 2. பூச்சிஉண்ணும் வௌவால்கள்

4. பூனையை போல இந்த வௌவால்கள் தன்னை தானே சுத்தம் செய்துகொள்ளும்

5. இந்த உலகில் சுமார் 50 மில்லியன் வருடமாக இந்த வௌவால்கள் உள்ளது. 

6. கடந்த சில வருடமாக வேகமா அழியும் காடுகளும், சாலையோர மரங்களும் இந்த வௌவால்கள் எண்ணிக்கை குறைவுக்கு முக்கிய காரணமாக உள்ளது. 

7. மேலும் பருவநிலை மாற்றமும், வாழிட அழிப்பும் (கோவில்களிலிருந்து வௌவால்கள் துரத்தத்படுதல்) ஒரு காரணமாகும் 

8. வௌவால்கள் கூட்டம் கூட்டமாக வாழும் சமுதாய விலங்கு

9. நாம் பெருமைப்படும் விஷயம் என்னவென்றால், நம்மிடையே இந்த வௌவால்கள் இருப்பதுதான். ஏனெனில் இந்த வௌவால்கள் மனிதனுக்கும், இந்த சூழலுக்கும் அதிகமான நன்மைகளை செய்கிறது.

10. இந்த வௌவால்கள் தன் எடையை விட மூன்று மடங்கு எடை உணவை உண்ணும்.

11. வௌவால்கள் முப்பது வருடம் வரை வாழும் 

12. Bumble Bee Bat, இது உலகத்திலே மிக சிறிய வௌவால். இது தீப்பெட்டிகுள் செல்லும் அளவு சிறியது. 

13. வயல்வெளிகள், விளைநிலங்கள், தோட்டம் போன்ற இடங்களில் உள்ள பூச்சிகளை பிடித்து உண்ணும். 

14. இவை ஒரு மணிநேரத்துக்கு சுமார் 600 பூச்சிகளை பிடித்து உண்ணும். 

15. இவை விதை பரவலிலும், மகரந்த சேர்க்கையிலும் சிறப்பான பங்கு வகிக்கிறது.

16. பல நாடுகளில் வௌவால்கள் நல்ல சகுனத்தின் அடையாளமாக உள்ளது

17. உலகில் உள்ள பெரிய வௌவாலின் இறக்கை அளவு ஆறு அடி ஆகும் 

18. உலகத்தில் மொத்தம் 1116 வகை வௌவால்கள் உள்ளது, அதில் 117 வௌவால்கள் இந்தியாவில் உண்டு. 
(நன்றி: வௌவால்கள் புத்தகம், Zoo Outreach)

நாம் இந்த வௌவால்கள் வாழிடங்களை பாதுகாக்க வேண்டும். இந்த அதிசய விலங்கின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும்  அனைவரிடமும் எடுத்து சொல்வது நம் கடமை. அதின் ஒரு சிறிய முயற்சியாக இந்த விழிப்புணர்வு (பள்ளிக்கூட) நிகழ்ச்சியாகும். 

அனைத்து மாணவர்களும் மிக உற்சாகமாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அவர்களின் உன்னிப்பு திறன் என்னை மிக கவர்ந்தது. இந்த நிகழ்விற்காக ஆசிரியர்களும் மிக சிறப்பாக உதவினார்கள். மதிப்பிற்கு உரிய தங்கவேல் ஐயா, என் ஆசிரியர்கள் மாரிமுத்து, டேனியல் ஆகியவர்களுக்கு என் நன்றிகள். 

இனி ஒரு விதி செய்வோம்....இந்த காடுகளையும்...நம் விலங்குகளையும் பாதுகாக்க...

0 comments:

Post a Comment